திருப்பூர், டிச. 6: திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (36). இவர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த மே மாதம் 1-ம் தேதி இரவு இவருடைய பெட்டிக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.4 ஆயிரத்து 100, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பீடி, சிகரெட், தின்பண்டங்கள் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த அன்புசெல்வம் (24), என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அன்புசெல்வத்துக்கு திருட்டு குற்றத்துக்கு 7 மாதம் சிறை தண்டனை, ரூ.200 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார்.
