×

திருப்பரங்குன்றம் தீப வழக்கு; 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்ற தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோரட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தது. அரசு கோரிக்கையை அடுத்து வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Tags : Thiruparangantham Deepa ,Madurai ,Thiruparanguntha Deepam ,Karthigai Deepa Festival ,Deepam ,Madurai Thiruparangundaram Subramaniaswamy Temple ,Uchipillaiyar Temple ,
× RELATED வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான...