மதுரை- தேனி சாலையை சீரமைக்க வேண்டும்

 

மதுரை, டிச. 3: மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மதுரை-தேனி மார்க்கத்தில் முடக்குச்சாலை சந்திப்பில் ரூ.53.95 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதுடன், எச்எம்எஸ் காலனி முதல் நாகமலைபுதுக்கோட்டை வரை ரூ.260 கோடியில் புதிதாக ‘அச்சம்பத்து புறவழிச்சாலை’ அமைக்கும் பணியும் நடக்கிறது. இதில், புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் சுமார் 60 சதவீதம் வரை முடிந்துள்ளன. குறிப்பாக, மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மதுரை-குமரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் விதமாக புதிதாக மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய பைபாஸ் சாலை அமைப்பதால் தற்போதுள்ள, சாலையில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, விராட்டிபத்து முதல் பஸ் நிறுத்தம் முதல் அச்சம்பத்து வரை பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி கிடக்கிறது. சாலையை பராமரிக்கும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை அலகு அதிகாரிகள் புதிய பைபாஸ் பணிகள் முடிக்கப்படும் வரை, தற்போதுள்ள சாலையை நிரந்தரமாக சீரமைக்க முன்வர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: