போதையில் மனைவியை தாக்கியபோது தடுத்த மாமியார் சுத்தியலால் அடித்து கொலை

காஞ்சிபுரம், டிச.3: காஞ்சிபுரம் அருகே மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியபோது தடுக்க வந்த மாமியாரை சுத்தியால் அடித்துக்கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அருந்ததி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (60). இவரது மனைவி சந்தவள்ளி (54). இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சந்தவள்ளியின் தாய் திலகா (70) அவருடன் வசித்து வந்துள்ளார். லட்சுமணன், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் வேலை செய்து வரும் நிலையில், பல மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் குடிபோதைக்கு அடிமையான லட்சுமணன், வீட்டிற்கு வரும்போதெல்லாம் குடிபோதையில் மனைவி மற்றும் மாமியாருடன் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி 6 மாதங்கள் கழித்து, நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த லட்சுமணன், தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லட்சுமணன், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவி சந்தவள்ளியை தாக்கியபோது, அதனை தடுக்க வந்த மாமியார் திலகாவையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயங்களுடன் இருவரும் மயங்கிய நிலையில், லட்சுமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாமியார் திலகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சந்தவள்ளி உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், தப்பி ஓடிய லட்சுமணனை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமியாரை மருமகன் சுத்தியலால் அடித்து கொலை செய்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியயையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: