விளாத்திகுளம், டிச. 2:விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மார்க்கண்டேயன், தினமும் தொகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகத்தில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் தெரிவித்தார்.
