×

போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி, டிச.2: போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போரூரில் மிகவும் பழமையான சிவகாம சுந்தரி உடனுறை ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை 4 மணியளவில் 6ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 6 மணி அளவில் மகா கடம் புறப்பாடு, யாத்ரா தானமும், 6.30 மணியளவில் மூலவர், ராஜகோபுரம், பரிவார தேவதைகள் விமானம் ஆகியவற்றில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம் திருவாசகம் சிவபுராணம் பாடி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கும்பாபிஷேக விழாவையொட்டி மாலையில் பஞ்ச மூர்த்திகள் விசேஷ அலங்காரத்துடன் திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் தேன்மொழி, செயல் அலுவலர் ஜெயராமன், திருப்பணிகள் குழு தலைவர் போரூர் மங்களாநகர் நடராஜன், உறுப்பினர்கள் குமரேசன், ரவிச்சந்திரன், மகேந்திரன், ராஜா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Porur Ramanadeeswarar Temple Kumbabhishekam ,Poontamally ,Porur Ramanadeeswarar Temple ,Lord ,Sivakama Sundari Udanurai Ramanadeeswarar Temple ,Porur ,6th Kaala Yagya Poojas ,
× RELATED புழல் அருகே தொடர் மழை காரணமாக குளமாக...