×

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள், ஊசியுடன் 5 பேர் கைது

 

சென்னை, டிச.1: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் ஊசியுடன் சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அந்த வழியாக வந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சென்னை குன்றத்தூரை சேர்ந்த சந்துரு (24), தாம்பரத்தை சேர்ந்த லோகேஷ் (22), பூந்தமல்லியை சேர்ந்த விக்னேஷ் (24), வடக்குமலையம்பாக்கத்தை சேர்ந்த சூர்யா (36), தினேஷ் (31) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பேக்கில் சோதனையிட்டபோது அதில் 100 கிராம் கொண்ட 400 போதை மாத்திரைகள், 40 போதை மருந்து செலுத்துவதற்கான ஊசி சிரிஞ்சுகளும் இருந்தது தெரியவந்தது.இதனை சென்னையில் வாங்கி வேலூரில் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகிக்க வந்ததையும் அவர்கள் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போதை மாத்திரைகளையும், சிரிஞ்சுகளையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vellore New Bus Stand ,Chennai ,Vellore North Police ,
× RELATED மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட...