கால்வாய் கரைகளில் பனை விதைகள் நடவு

தேவாரம், டிச.1: உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கண்மாய்கள், குளங்கள், தண்ணீர் நீர்வரத்து கால்வாய்களில் தன்னார்வலர்கள் இணைந்து மரங்களை நடவு செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க பனை விதைகள் தேர்வு செய்யப்பட்டு கரையோரங்களில் நடவு செய்யும் பணிகளில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. உத்தமபாளையம் நன்செய் தன்னார்வ அமைப்பு என 5,000 பனை விதைகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த பசுமை பணி நீர்நிலைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பனை விதை நடவிற்கு நன்செய் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். பேராசிரியர் மேஜர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். பனை விதை நடலில் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், பண்ணைப்புரம் 18ம் கால்வாயில் ஆர்வத்துடன் பணை விதைகளை நடவு செய்தனர். இதன் மூலம் பனை விதைப்பு அதிகரிக்கும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுவதுடன், இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கான சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாறுவதற்கு ஊக்கமாக இருந்தது.

நிகழ்வில் பசுமை, பாதுகாப்பு, மனிதநேயம் ஆகியவை கலந்த உரையாடல் நடந்தது. பண்ணைப்புரம் 18ம் கால்வாயில் மட்டும் 300 விதைகள் நடப்பட்டன. தொடர்ந்து பணிகள் நடைபெறும் என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: