- சுவாமி திருவீதியுலா
- கற்பக விருக்ஷம்
- தீபத் திருவிழா விழா
- திருவண்ணாமலை
- கார்த்திகை தீபத்திருவிழா
- அண்ணாமலையார்
- கற்பக விருக்ஷ வாகனம்
- மாடா தெரு
- பஞ்சமூர்த்தி பவானி
திருவண்ணாமலை, நவ. 28: கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவமான நேற்று வெள்ளி கற்பக விருட்சம் வாகனத்தில் அண்ணாமலையார் பவனி வந்து அருள்பாலித்தார். பஞ்சமூர்த்திகள் பவனியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி மாடவீதியுலா நடக்கிறது. முதல் நாளான்று அதிகார நந்தி வாகனத்திலும், 2ம் நாளன்று இந்திர விமானத்திலும், 3ம் நாளன்று சிம்ம வாகனத்திலும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 4ம் நாள் உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் செய்தனர். அதைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் உற்சவர் புறப்பாடு தொடங்கியது. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் திட்டிவாசல் வழியாக திருக்கோயிலிலை கடந்து வந்து ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர், வெள்ளி மூஷக வாகனத்தில் விநாயகரும், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இசை வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியடி காலை உற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, இரவு உற்சவம் இரவு 9 மணியளவில் தொடங்கியது. அப்போது, ராஜகோபுரம் எதிரே அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியபோது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ ‘உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், பிரமாண்டமான வெள்ளி கற்பக விருட்சம் வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பாராசக்தி அம்மனும், வெள்ளி இந்திர விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு வரை நீடித்த திருவீதியுலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கோயில் பிரகாரங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
