×

நூற்றாண்டை கடந்த வெள்ளித் தேரோட்டம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு திருக்கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் நாளை

திருவண்ணாமலை, நவ. 28: கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளித் தேர் வீதியுலா நாளை நடக்கிறது. அதையொட்டி, விரைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மகா தீப திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், தீபத்திருவிழா 10 நாட்கள் உற்சவத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் நாளை (29ம் தேதி) நடக்கிறது.

அதையொட்டி, நாளை இரவு 9 மணியளவில் வெள்ளித் தேரோட்டம் ெதாடங்கும். அப்போது, வெள்ளி விமானங்களில் விநாயகர், சுப்பிரமணியர், வெள்ளித் தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், இந்திர விமானத்தில் பராசக்தியம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வர் மாட வீதியில் பவனி வருவார்கள். மலர்கள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பவனி வரும் காட்சியை தரிசிப்பது ஆன்மிக பேரானந்த நிகழ்வாகும். அண்ணாமலையார் கோயிலுக்கு, கடந்த 1907ம் ஆண்டு வெள்ளித் தேர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது. நூற்றாண்டு கடந்த வெள்ளித் தேரோட்டத்தை முன்னிட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, திருக்கோயில் உட்பிரகாரங்கள் மற்றும் வெளி பிரகாரம், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் கண்டறியும் நிபுணர்கள் துப்பறியும் நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கோயில் மற்றும் மாட வீதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Centenary Silver Chariot Parade ,Thirukarthigai Deepathiruvilha festival ,Tiruvannamalai ,Silver Chariot Parade ,Karthigai Deepathiruvilha festival ,Karthigai Deepathiruvilha ,Annamalaiyar temple ,
× RELATED ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றிய 2...