திருச்சி, நவ.27: ரங்கம் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்பு பாதை காவல் நிலையங்கள் அமைந்துள்ளது. அங்கு பயணிகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க இணைய வழி புகார் அளிப்பு மையத்தை ரயில்வே பாதுகாப்பு படை, உதவி மேலாண்மை அமைப்பை பொருத்தியுள்ளது. இதன் வாயிலாக பயணிகள் ரயில்வே நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் உடனடியாக உதவிகள் பெற, துல்லியமான புகார் அளிக்க இந்த அமைப்பு உதவும்.
ரங்கம் ரயில்வே நிலையத்தில் இந்த அமைப்பை பொருத்தும் முன் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பல்வேறு பயணிகளால் இந்த திட்டம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின் நல்ல பயன் அளிப்பதாக கருத்துக்கள் பெற்ற பிறகு ரங்கம் ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மேலாண்மை அமைப்பு தொடுதல் நடைமுறையில், பல்வேறு மொழிகளை தேர்வு செய்து பயணிகள் தங்களுக்கு தேவையான படிவங்களை தேர்வு செய்து தங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு தேவைப்பட்டால் ஒளி தகவல்களையும் செழுத்தி அதிகாரிகளை உடனடியாக உதவிக்கு அழைக்கலாம்.
இதன் வாயிலாக பயணிகளுக்கும், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் உண்டான இடைவெளி குறைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வாயிலாக திருட்டு, தவறான நடவடிக்கை, தொலைந்து போன பொருட்களை மீட்க, பாதுகாப்பு மீறல் மற்றும் வேறு தேவைப்படும் தேவைகளை பயணிகள் பூர்த்தி செய்து கொள்ளலாம். திருச்சி ரயில்வே கோட்டத்தில் இது போன்ற இணைய வழி சேவை இங்கே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி மேலாண்மை அமைப்பை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட மேலாளர் செல்வன், முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவ் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகள் இருந்தனர். முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவ் ரயில்வே கோட்ட மேலாளருக்கு இந்த அமைப்பு செயல்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
