வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணியில் செயல் விளக்க முகாம்

நீடாமங்கலம், நவ. 27: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயோபொட்டாஷ் உரம் நன்மை குறித்த செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. பயிருக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதில் சாம்பல் சத்து விளைச்சலைப் பெருக்கவும், பூச்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. சாம்பல் சத்துக்காக பொட்டாஷ் உரம் வெளிநாடுகளிலிருந்து, ரசாயன உரமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கழிவிலிருந்து பொட்டாஷ் உரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படுவது பயோ பொட்டாஷ் உரம் ஆகும். பயோ பொட்டாஷ் உரம் பற்றி கோவில்வெண்ணி கிராம விவசாயிகளுக்கு, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நெல் வயலில் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

அப்போது சுற்றுச்சூழல் அறிவியல் துறையை சேர்ந்த பிரபாகரன் விவசாயிகளிடம் விளக்கி கூறும்போது, பொட்டாஷ் உரம் என்பது தாவரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இது சாம்பல் சத்தை வழங்கும் ஒரு வகை உரமாகும். இது பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம், வைட்டமின் சி மற்றும் மாவுச்சத்து உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விவசாயிகள் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் ரசாயன உரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் செலவு அதிகரிக்கிறது. உயிர்-பொட்டாஷ் அல்லது பயோ பொட்டாஷ் தாவரப் பொருட்கள் மற்றும் கால்நடை கழிவுகள் போன்ற இயற்கை ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கை உரம் ஆகும். இதில் 16 சதம் பொட்டாசியம் சத்து பயிருக்கு எளிதில் கிடைக்கும்படி இருக்கிறது.

உயிர் பொட்டாஷ் இடுவதால் மண்ணில் இயற்கையாக உள்ள கரையாத பொட்டாஷ் சேர்மங்களை கரைத்து, தாவரங்களால் உறிஞ்சப்படும் வடிவத்திற்கு மாற்றப்படுகிறது. மேலும் உயிர் பொட்டாஷ் இடுவதால் இரசாயன பொட்டாஷ் உரத்தின் தேவையை சுமார் 50-60 சதம் குறைக்கலாம். நெல் தானியங்கள் அதிக எடையுடன் காணப்படும். இது ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை என்ற அளவில் சாதாரண ரசாயன பொட்டாஷ் உரம் போலவே இடலாம்.
ஒரு மூட்டை சுமார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை போட்டால் போதும். இதை அனைத்து பயிர்களுக்கும் இடலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த செயல் விளக்க முகாம் காரணமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்.

Related Stories: