×

உயரிய தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி அரியானாவின் குருகிராம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருக்கிறது. இதற்கான விருதை ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார். இந்த நிலையில், தேசிய விருதை பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள். நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்.

Tags : Chennai Municipal Transport Corporation ,Chennai ,TMC ,Chief Minister of Tamil Nadu ,K. Stalin ,Urban Transport Skills Award ,Ministry of Urban Affairs of the Union Government ,Gurugram ,Ariana ,
× RELATED தமிழகத்தில் இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!