×

இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாலாஜாபாத் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி

வாலாஜாபாத், நவ.11: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் அருகில் உள்ள ஒரகடம், படப்பை, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் வாலாஜாபாத்தில் இருந்துதான் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையில் நாள்தோறும் பேருந்து பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் மணிக்கணக்காக காத்திருந்து பேருந்தில் செல்வது வழக்கம். இந்த பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதி மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லை.

மேலும் பெரும்பாலான பயணிகள், முதியவர்கள் அதிகம் வந்து செல்வதால் இங்கு இயற்கை உபாதை கழிப்பதற்கும், தாகத்தை தீர்ப்பதற்கு குடிநீர் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள திண்ணை போல் இருக்கும் இடத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்து பேருந்துக்காக காத்திருக்கிறோம். ஒரு சில நேரங்களில் பேருந்து வந்து திரும்பும்போது காலை உரசியவாறு பஸ் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

கிராம மக்கள் தவிப்பு
வாலாஜாபாத் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு நாள்தோறும் காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வாலாஜாபாத் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்பவர்கள் வாலாஜாபாத் வந்து இங்கிருந்து எந்த நேரத்திற்கு கிராமப்புற பேருந்துகள் செல்வது என்பது தெரியாமல் திகைத்து வருகின்றனர். ஏற்கனவே இங்கு போக்குவரத்து துறை சார்பில் டைம் கீப்பர் பணியில் இருந்து வந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணியில் இங்கு யாரும் இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் எந்த நேரத்திற்கு வந்து செல்கிறது என்பது தெரியாமல் வெளியூர் பேருந்து பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags : Wallajabad ,Wallajabad Panchayat ,Kanchipuram ,Chengalpattu ,Sunguvarchatram ,Oragadam ,Patapai ,Tambaram ,
× RELATED காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன்...