×

குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் உல்லாசமாக வாழ பெண்களை மிரட்டி பணம் பறிக்க காதலன் திட்டம் அம்பலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது உறவினரும், நண்பருமான ரவி பிரதாப்சிங்கை(29) தனிப்படையினர் டெல்லியில் சென்று கைது செய்தனர். நேற்று அவரை ஓசூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி தர்மபுரி சிறையிலடைத்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், நேற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘நீலுகுமாரி-ரவி பிரதாப்சிங் ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2 ஆண்டுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் நீலுகுமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. ரவி பிரதாப் சிங்கிடம் பேசுவதை போலவே சந்தோஷிடமும் நீலுகுமாரி செல்போனில் பேசி வந்தார். ஓசூர் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்த நீலுகுமாரி சம்பளத்தில் ஒரு பகுதியை ரவி பிரதாப் சிங்கிற்கு அனுப்பி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், நீலுகுமாரியிடம் பேசிய ரவி பிரதாப் சிங், கார் வாங்க ஆசையாக உள்ளது. உன்னை காரில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும். அதற்கு பணம் தேவை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் கடந்த மாதம் பெங்களூருவில் சந்தித்துள்ளனர்.

அப்போது, ரவி பிரதாப் சிங் ஒரு கேமராவை நீலுகுமாரியிடம் கொடுத்து, விடுதி குளியலறையில் பொருத்துமாறு தெரிவித்துள்ளார். மேலும், உடன் தங்கியிருக்கும் பெண்களின் செல்போன் எண்களை, தனக்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். விடுதி குளியலறையில் பதிவாகும் காட்சிகளை வைத்து, சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறித்து ஜாலியாக வாழலாம் என ஐடியா கொடுத்துள்ளார். இந்நிலையில், ரகசிய கேமரா விவகாரம் வெளியே தெரிந்ததால், காதலனை தப்ப வைக்க தன்னிடம் பேசி வந்த சந்தோஷ் தான் உடந்தை எனக்கூறி, அவரை மாட்டி விட நீலுகுமாரி திட்டம் போட்டுள்ளார். ஆனால் அவரது திட்டம் வெளியாகி ரவி பிரதாப் சிங் சிக்கி கொண்டார் என்றனர்.

Tags : Hosur ,Neelukumari Gupta ,Odisha ,Vanniyapuram ,Krishnagiri district ,
× RELATED தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு...