×

ஹாங்காங் சிக்சஸ்: இந்தியாவை தட்டி தூக்கிய மூன்று குட்டி நாடுகள்; குவைத், எமிரேட்ஸ், நேபாளம் சாதனை

மாங் காக்: ஹாங்காங் சிக்சஸ் போட்டிகளில் நேற்று, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம் அணிகளுடன் மோதிய இந்தியா 3 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை தழுவியது. ஒரு இன்னிங்சில் வெறும் 6 ஓவர்கள், 6 வீரர்கள் மட்டும் கொண்ட ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டிகள் ஹாங்காங்கின் மாங் காக் நகரில் நடந்து வருகின்றன. குரூப் சி பிரிவில் நேற்று நடந்த முதல் போட்டியில் குவைத் அணியுடன், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி மோதியது. முதலில் ஆடிய குவைத் அணியின் கேப்டன் யாஸின் படேல் அமர்க்களமாக ஆடி 14 பந்துகளில் 8 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் அவுட்டாகாமல் 58 ரன் குவித்தார். 6 ஓவரில் அந்த அணி 106 ரன்கள் குவித்தது. பின், 107 ரன் இலக்குடன் ஆடிய இந்தியா, 5.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 79 ரன் மட்டுமே எடுத்து, 27 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

2வது போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதிய இந்தியா, 6 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய எமிரேட்ஸ் அணி 5.5 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 111 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3வது போட்டி இந்தியா – நேபாளம் இடையே நடந்தது. அப்போட்டியில் முதலில் ஆடிய நேபாளம், 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன் குவித்தது. கேப்டன் சுந்தீப் ஜோரா 12 பந்தில் 47, ரஷித் கான், 17 பந்தில் 55 (ரிடையர்ட் ஹர்ட்), லோகேஷ் பாம் 7 பந்தில் 31 ரன்கள் வெளுத்தனர். அதன் பின் ஆடிய இந்தியா, 3 ஓவரில் 45 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 92 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளை அடுத்து, அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

Tags : Hong Kong Sixes ,India ,Kuwait ,Emirates ,Nepal ,Hong Kong ,United Arab Emirates ,
× RELATED ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி:...