×

இந்த வார விசேஷங்கள்

8.11.2025 – சனி சங்கடஹர சதுர்த்தி

சங்கடங்களைத் தீர்த்து, சகல காரியங்களையும் சித்தி தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், காலை முதல் விரதமிருந்து, விநாயகருடைய பெருமையை எண்ணி, மாலையில் அவருடைய திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். எளிதில் கிடைக்கக்கூடிய அறுகம்புல் மாலை கட்டி, அவருக்குச் சமர்ப்பிக்கவேண்டும். எல்லா விநாயகர் ஆலயங்களில், அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதற்கு உதவலாம். விநாயகர் கவசம், விநாயகர் நான் மணிமாலை, விநாயகர் அகவல் முதலிய நூல்களைப் பாராயணம் செய்யலாம்.

9.11.2025 – ஞாயிறு கூரகுலோத்துமதாசர் திருநட்சத்திரம்

கூரகுலோத்துமதாசர் பிள்ளை, லோகாச்சாரியார் சீடர். அவர் நியமித்தபடி திருவாய்மொழிப்பிள்ளை என்கின்ற ஆசாரியரை திருத்திப் பணி கொண்டவர். ஐப்பசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தவர். திருவரங்கத்தில் அந்நியப் படையெடுப்பு நடந்த போது, திருவரங்கநாதனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால், அவரை தனி பல்லக்கில் வைத்து பிள்ளை லோகாச்சாரியார், மதுரைக்கு சென்றார். அவருக்கு நெருக்கடியான சமயத்தில், அணுக்கத் தொண்டராக இருந்தவர், கூர குலோத்துமதாசர். பிள்ளை லோகாச்சாரியார் தன்னுடைய அந்திம காலத்தில் அதாவது 118ம் வயதில், அப்பொழுது பாண்டிய நாட்டின் அரசனுக்கு மந்திரியாக இருந்த திருவாய்மொழிப் பிள்ளையிடம் வைணவ சமயத் தலைமையைத் தரவேண்டும் என்று தம் சீடர்களுக்கு சொல்லிவைத்தார்.

திருவாய்மொழிப் பிள்ளையை அணுகுவது அத்தனை எளிதாக இல்லை. பாண்டியநாட்டின் அரசன் இறந்து போனதால், அரசகுமாரன் பதவிக்கு வந்தார். அவனுக்கு தக்க ஆலோசனைகூறி, அரசாங்கத்தை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே, வைணவ சமயத்தில் அதிக காலம் ஈடுபடுகின்ற வாய்ப்பு இல்லாமல் போனது.

ஆயினும் அவரைத்திருத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்த கூரகுலோத்துமதாசர், ஒரு நாள் அவர் பல்லக்கில் வீதி வலம் வரும்போது, ஆழ்வார் பாசுரங்களை மனமுருகிப் பாடினார்.

அப்போது பல்லக்கில் இருந்தபடியே அந்த பாசுரத்தில் ஈடுபட்ட திருவாய்மொழிப்பிள்ளை, அதற்கான அர்த்தங்களைக் கேட்க, இப்படி பல்லக்கில் அமர்ந்து கொண்டு அர்த்தத்தை கேட்பது தகாது என்று கண்டித்த கூரகுலோத்துமதாசர், அவருக்கு முகம் கொடுக்காது நடந்தார். இதைக்கண்டு வருந்திய திருவாய்மொழிப் பிள்ளை, தம் அன்னையாரிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல, அவர் கூரகுலோத்துமதாசர் பெருமையைச் சொல்லி, அவரிடம் சென்று வைணவ நெறிகளின் அர்த்தங்களைக் கேட்கவேண்டும் என்று சொல்ல, மறுநாள் கூரகுலோத்துமதாசரை சந்தித்தார். தம்முடைய அரசியல் நெருக்கடிகளைச் சொல்லி, காலை பூஜை செய்யும் போது உள்ள அவகாசத்தில், தம் இல்லம் வந்து, தனக்கு நல்ல அர்த்தங்களை எல்லாம் சொல்லவேண்டும், வைணவ சமயதத்துவங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தார். கூரகுலோத்துமதாசரும், தம் குருவின் கட்டளைப்படி, காலையில் திருவாராதனம் செய்கின்ற வேலையில், பல அர்த்த விசேஷங்களைச் சொன்னார்.

இதன் மூலம் அவர் திருத்தி பணிகொண்டார். அவரை திருப்புல்லாணி அழைத்துச் சென்று, சகல கலைகளையும் கற்பித்தார். வைணவ சமய வளர்ச்சியில் ஈடுபடச் செய்தார். கூரகுலோத்துமதாசர், அவதரித்த நட்சத்திரம் இன்றைய நட்சத்திரம் ஐப்பசி திருவாதிரை.

10.11.2025 – திங்கள் திருஇந்தளூர் துலா (ஐப்பசி) உற்சவம்

பஞ்சரங்க தலங்களுள் திருஇந்தளூர் பரிமளரங்கமாக விளங்குகிறது. மது, கைடபன் என்ற அசுரர்கள் வேதங்களைப் பறித்துச் சென்றதனால், இறைவன் மச்சாவதாரம் எடுத்து, மது, கைடபர்களை வதம் செய்து, வேதங்களை மீண்டும் பெற்றுத்தந்தார். வேதங்களுக்கு அசுர சம்பந்தத்தாலே ஏற்பட்ட மாற்றத்தைப் போக்கி, நல்ல மணத்தை (பரிமளம்) உண்டு பண்ணியமையால், “பரிமள ரெங்கநாதர்’’ என இறைவன் அழைக்கப் பெறுகின்றனர். வேதங்களுக்கு பரிமளத்தைத் கொடுத்த தலமானபடியால், இங்குள்ள மூலஸ்தான விமானத்திற்கு, “வேதாமோத விமானம்’’ என்ற பெயர் வழங்குகிறது. காவிரித்தாயார், கங்கையைக் காட்டிலும் சிறப்புப் பெற வேண்டு மென்று, இத்தலத்தில் தவமியற்ற அவ்வண்ணமே உனது கரை மருங்குகளிலே நான் திருக்கோயில் கொண்டு, உனக்குப் புண்ணியத்தை தருகிறேன் எனக்கூறி, திருவரங்கப் பட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம் (கோயிலடி), திருகுடந்தை (மத்தியரங்கம்), திருஇந்தளூர் (பரிமளரங்கம்) என ஐந்து தலங்களில் சிறப்பாக சயனித்திருக்கிறார். மக்கள், கங்கையில் நீராடி பாவங்களை கழித்து வருவதால், தனக்கேற்பட்ட பாவம் நீங்க, கங்கையே துலா ஐப்பசி மாதத்தில் இங்கு வந்து காவிரியில் நீராடுவதால் திருஇந்தளூர் கங்கையைவிட காவிரிக்கு முக்கியத்துவம் கொடுத்த தலம். நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் மிக முக்கியமான திருஇந்தளூரில் அருள்மிகு பரிமளரெங்கநாதர் என்ற திருநாமத்துடன் திருக்கோயில் கொண்டிருக்கும் மருவினிய மைந்தனுக்கு, துலாப் பெருந்திருவிழா கீழ்க்கண்டவாறு சிறப்பாக நடைபெறும்.

*முதல் நாள் உற்சவம் – 8.11.2025 – சனி – காலை கொடியேற்றம், மாலை அன்னவாகனம்.
*இரண்டாம் நாள் – 9.11.2025 – ஞாயிறு – காலை மங்களகிரி புறப்பாடு, மாலையில் சந்திரபிரபை.
*மூன்றாம் நாள் – 10.11.2025 – திங்கள் – காலை மங்களகிரி, மாலையில் சேஷவாகனம்.
*நான்காம் நாள் – 11.11.2025 – செவ்வாய் – மாலையில் கருட வாகனசேவை.
*ஐந்தாம் நாள் – 12.11.2025 – புதன் – மாலையில் அனுமந்தவாகனம்.
*ஆறாம் நாள் – 13.11.2025 – வியாழன் – மாலையில் யானை வாகனம்.
*ஏழாம் நாள் – 14.11.2025 – வெள்ளி – திருக்கல்யாணம், இரவு சூர்ண அபிஷேகம் மற்றும் காவிரியில் தீர்த்தவாரி.
*எட்டாம் நாள் – 15.11.2025 – சனி – காலையில் வெண்ணெய்த்தாழி உற்சவம், மாலையில் வெள்ளி குதிரைவாகனம்.
*ஒன்பதாம் நாள் – 16.11.2025 – ஞாயிறு – திருத்தேர்.
*பத்தாம் நாள் – 17.11.2025 – திங்கள் – காலையில் பெருமாள் திருவடி திருமஞ்சனம், துவாதசி ஆராதனம். இரவு கொடி இறக்குதல்.

11.11.2025 – செவ்வாய் சக்தி நாயனார் குருபூஜை

சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரில் பிறந்தவர், சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும் சிவசிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில் யாராவது சிவத்துரோகம் செய்தாலும், சிவ அபசாரம் செய்தாலும், சற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார். “சிவ அபசாரம் ஒருவனை நரகத்தில் தள்ளும். இப்பொழுதே தண்டனையைப் பெறுவது நல்லது. இல்லாவிட்டால், அவர்கள் மிகப் பெரிய ஆன்ம நாசத்திற்கு ஆளாகி, நரகத்தில் மீட்டெடுக்க முடியாமல் உழல்வார்கள்” என்பார். அவர் முன்னாலே சிவனைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு, அனைவரும் அஞ்சுவார்கள். அவர் தம்முடைய செல்வம், நேரம், உடல் உழைப்பு இவற்றால் முழு நேரம், சைவ சமய வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தார். அவர் சிவபதம் அடைந்த தினம் ஐப்பசி பூசம், குருபூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

12.11.2025 – புதன் காலபைரவாஷ்டமி

சிவபெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை, “கால பைரவ அஷ்டமி’’ என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து, சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத் தரும். இந்த நாட்களில், காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமன வேளையில் பைரவரையும் வழிபடவேண்டும். அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி தரிசனம் செய்வதன் மூலமாக, நமக்கு மிகச் சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். சுபகாரியத் தடைகள் தூள் தூளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை, கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்துவிடும். உக்கிர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க, சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.

13.11.2025 – வியாழன் ஸ்ரீரங்கம் மதுரகிரி நந்தவனம் குருபூஜை

1846-ஆம் வருடம், தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில், வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான, அரங்கப் பிள்ளை – ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார், மதுரகவி சுவாமிகள். திருவரங்கத்தில், உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார். வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள், அழகில் மனதை பறிகொடுத்த நிலையில், திருமாலுக்கு மலர் மாலை கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதிபூண்டார். அதற்காக மாலைகளை தொடுக்கும் கலையை கற்றுக் கொண்டார்.

மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயதில் அவரது பெற்றோர், திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டார். இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி, அழகுப் பார்த்தார் மதுரகவி. தனக்கு வரவேண்டிய சொத்தினை பெற்றுக்கொண்டு. இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.

வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும், தாயாருக்கும், சக்கரத்து ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே வருகின்றன. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, பட்டுரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ, குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள் நிறைந்த நந்தவனத்தில், தினமும் அதிகாலை வேளையில், சுமார் பத்து ஏகாங்கிகள், மாலை கட்டுதல், பூப்பறித்தல் என தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோயிலின் திருப்பணியைத் துவக்கி, ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து, எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து, கிபி 1903ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடத்தினார்.

இதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக் கொண்ட மதுரகவி சுவாமிகள், அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார். திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில், அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு உள்ளது. திருவரங்கம் கோயில், வெளியாண்டாள் சந்நதிக்கு அருகில், மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு, ஒரு கல்வெட்டாக, அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

Tags : Sankadahara ,Chaturthi ,Lord ,Vinayaka ,
× RELATED செல்வம் பொழியும் வைத்தமாநிதி பெருமாள்