திண்டிவனம், நவ. 1: பாமக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் தர ராமதாஸ் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை, கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, தேனி, கோவை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 39 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 1) ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்த துண்டறிக்கை அச்சடித்து மாவட்டத்திற்கு உட்பட்ட பாமக, வன்னியர் சங்கம் மற்றும் சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகளுக்கு வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இப்பணிகளை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கண்காணித்தும் வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்பட39 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட செயற்குழு கூட்டங்கள் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய செயல் தலைவராக ராமதாசின் மூத்தமகள் காந்தி நியமிக்கப்பட்டதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் ராமதாஸ் தலைமையிலான பாமகவிற்குதான் முழு அங்கீகாரம் உள்ளதாகவும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 30ல் பாமக சிறப்பு பொதுக்குழுவை கூட்டி மீண்டும் ராமதாசுக்கு முழு அங்கீகாரத்தை வழங்கி பல்வேறு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு செயற்குழு, பாமக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி சின்னத்தை அன்புமணியிடம் இருந்து மீட்டெடுக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கட்சியின் சின்னம், கொடி அங்கீகாரம் தொடர்பாக ராமதாஸ் தரப்பின் கேள்விகளுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதிலளிக்காத நிலையில் டிசம்பர் பொதுக்குழுவுக்குபின் தேர்தல் கூட்டணியை ராமதாஸ் உடனே அறிவிப்பார் என தெரிகிறது. அதன்பிறகும் ஆணையத்திடம் இருந்து அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க ராமதாஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வாக்காளர் திருத்தப்பணி தொடர்பான தமிழக அரசு கூட்டுகின்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க பாமக சார்பில் நிறுவனர் ராமதாசுக்கு அழைத்து விடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமதாஸ் கலந்து கொள்ளும்பட்சத்தில் தமிழக அரசியலில் மிகுந்த திருப்பு முனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
