சங்கராபுரம், அக். 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவருக்கு அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு அஜய்குமார் மற்றும் ஆண்டனி ஆகிய இருவரும் அரசம்பட்டு கிராமத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மூணாறு பகுதியில் மிளகு தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுவதால் அரசம்பட்டு கிராமத்தில் இருந்து ஆட்களை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணியின் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 2 ஆடுகள் திடீரென காணாமல் போனதால் மணி, சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு மஞ்சபுத்தூர் கிராமத்திலிருந்து ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில், கேரள மாநிலம் பதிவெண் கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் 2 ஆடுகளை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பதற்காக எடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் போலீசார், அவர்கள் 2 பேரையும் மற்றும் ஆடுகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் சிக்கிய 2 நபர்களும் கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்த ராஜன் மகன் அஜய்குமார் (41), உலகண்ணன் மகன் ஆண்டனி (50) என்பதும் மாதத்துக்கு 3 முறை கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மிளகு தோட்டத்துக்கு ஆட்கள் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் நுழைந்து 2 நாட்கள் நோட்டமிட்டு இரவோடு இரவாக ஆடுகளை திருடிக்கொண்டு, அப்போது ஆடுகள் கத்தாமல் இருக்க செலோடேப்பால் ஆட்டின் வாயை ஒட்டி விடுவதும், அதன் பிறகு இருசக்கர வாகனத்தில் ஆடுகளை கடத்தி சென்று சந்தையிலோ அல்லது தனி நபரிடமோ விற்பனை செய்துவிட்டு சென்று விடுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
