×

சொத்து விற்ற பணத்தில் பங்கு கொடுக்காததால் மாமனாரை அடித்து கொன்ற மருமகன்: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: சொத்து விற்பனை செய்ததில் தங்களுக்கான பணத்தை தராததால் ஆத்திரத்தில் மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (40). இவருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் கல்லுப்பட்டி, வள்ளியம்மை தெருவை சேர்ந்த சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஆர்த்தி, சங்கீதா என்ற மகள்கள் உள்ளனர். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெரு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து, அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார்.

இவரது, மனைவியின் சொந்த ஊரான தேனியில் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை, அவரது தந்தை அழகர்சாமி (55), விற்பனை செய்துள்ளார். இதில் இவரது மனைவி சரண்யாவுக்கு பணம் எதுவும் தரவில்லை என்பதால், கடும் கோபத்தில் ராஜா இருந்துள்ளார். இந்நிலையில், பொழிச்சலூரில் உள்ள தனது மகள் சரண்யாவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தேனியில் இருந்து அழகர்சாமி வந்திருந்தார். அப்போது, சொத்து விற்ற பணத்தில் தங்களுக்கு பணம் தராதது குறித்து மருமகன் ராஜா, மாமனாரிடம் கேள்வி எழுப்பினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து, மாமனார் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அழகர்சாமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, மருமகன் ராஜாவை கைது செய்தனர். சொத்து பிரச்னையில் மாமனாரை, மருமகன் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pallavaram ,Raja ,Tiruvannamalai district ,Kallupatti, Theni district… ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...