×

மாதவரத்தில் பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயின்டர் படுகொலை: மர்ம கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரத்தில் பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயின்டரை படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் அம்பேத்கர் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த தொழிற்சாலை கடன் பிரச்னை தொடர்பாக மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை இந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொழிற்சாலை சுவ்ர ஓட்டை வழியாக உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பர்மா காலனியை சேர்ந்த பெயின்டர் சந்துரு (எ) லோகேஷ் (24) என தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர்களிடையே ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம், என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், புழல் உதவி ஆணையர் சத்யன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகள் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும், என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Madhavaram ,Ambedkar Nagar, Madhavaram ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...