×

பைக்குகள் நேருக்குநேர் மோதி புதுமாப்பிள்ளை பரிதாப பலி 2 பேர் படுகாயம் அணைக்கட்டு அருகே

அணைக்கட்டு, ஆக.15: அணைக்கட்டு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் சிகிச்சை பலனின்றி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா புலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணா(19). இவர் இறைவன்காடு பகுதியில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடைய நண்பருடன் கடந்த 7ம் தேதி பைக்கில் அணைக்கட்டில் இருந்து மூலைகேட் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா வீரப்பனூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(25). இவர் பைக்கில் மூலைகேட் பகுதியிலிருந்து அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மூலைகேட் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் 2 பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மூன்று பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகநாதன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.அதேபோல் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர்கள் குணா, சுரேஷ் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்த லோகநாதனுக்கு மலை பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 7 மாதங்களே ஆவது தெரியவந்தது, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anicut ,Guna ,Pulimedu ,Anicut taluka ,Vellore district ,
× RELATED தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி...